புதுடெல்லி: பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதையை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆதிசங்கரர், பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் தேவ் போன்ற மகான்கள் காட்டிய வழியைப் பின்பற்றும் அதே வேளையில், மறுபுறம் ஹைடெக் அறிவு மையமாக இந்தியாவை மத்திய அரசு மாற்றி வருகிறது என்று நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முஉரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. குடியரசுத் தலைவராக கடந்த 2022 ஜூலை 25-ம் தேதி பதவியேற்ற அவர், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:
கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் நலனை முன்னிறுத்தி துணிச்சலாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக அரசு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுகின்றன. பல்வேறு அரசு திட்டங்களில் ஆதார் இணைப்பு மூலம் போலி பயனாளிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதியுதவி செலுத்தப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. அப்போது மத்திய அரசு இலவச உணவு தானிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டம் மூலம் ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 220 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் சுமார் 9,000 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மிக குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஏழைகள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் எனஅனைத்து சமூகத்தினரின் கனவுகளையும் மத்திய அரசு நனவாக்கி வருகிறது. பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நாட்டின் 11 கோடி குறு, சிறு விவசாயிகளின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப் பட்டிருக்கிறது.
பழங்குடியினர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியதன் மூலம் ஓபிசி பிரிவினரின் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை அரசாங்கம் நிரூபித்துள்ளது.
பெண்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அடிமை மனப்பான்மையின் ஒவ்வொரு அறிகுறியையும் அகற்ற அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லி ராஜபாதை இப்போது கடமை பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது. தேசிய போர் நினைவுச்சின்னம் தேசிய வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. சத்ரபதி சிவாஜி வழங்கிய முத்திரையை கடற்படை பெற்றிருக்கிறது.
நமது பாதுகாப்பு படைகள் இளைஞர் சக்தியால் பலம் பெறுகின்றன. இதை கருத்தில் கொண்டு அக்னி பாதை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு, ஒலிம்பிக் மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். பிரதமர் கதி-சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2014 முதல் 2022 வரையிலான தற்போதைய மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டின் விமானப் போக்குவரத்து துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2014 வரை நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தது. இப்போது 147 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய நீர்வழிகள் உருவாக்கப்படுகின்றன.
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. முப்படைகளையும் நவீனமயமாக்கி வருகிறோம்.
நமது பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதையை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஒருபுறம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில், மறுபுறம் நவீன நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படுகிறது. ஒருபுறம் கேதார்நாத், காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. மறுபுறம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புனித தலங்களை மேம்படுத்தி வரும் அதே நேரத்தில், உலகின் முக்கிய விண்வெளி சக்தியாக இந்தியாவை மாற்றி வருகிறோம்.
ஒருபுறம் ஆதிசங்கரர், பசவேஸ்வரர், திருவள்ளுவர், குருநானக் தேவ் போன்ற மகான்கள் காட்டிய வழியைப் பின்பற்றுகிறோம். மறுபுறம், ஹைடெக் அறிவு மையமாக இந்தியாவை மாற்றி வருகிறோம். காசி தமிழ் சங்கமம் மூலம் ஒரே பாரதம் உணர்வை வலுப்படுத்துவதோடு, ஒரே நாடு, ஒரே ரேஷன், டிஜிட்டல் இந்தியா, 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஒருபுறம் யோகா, ஆயுர்வேத முறைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறோம். மறுபுறம் உலகின் மருந்தகமாக இந்தியாவை உருவாக்கி வருகிறோம்.
இயற்கை விவசாயம், பாரம்பரிய சிறுதானியங்களை ஊக்குவித்து வருகிறோம். அதேநேரம் நானோ யூரியா போன்ற நவீன தொழில்நுட்பத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் முர்மு பேசினார்.
‘சுயசார்பு இந்தியாவை 2047-ம் ஆண்டில் கட்டி எழுப்புவோம்’: குடியரசுத் தலைவர் முர்மு தனது உரையில் கூறியதாவது: இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது கடமைகளை செவ்வனே ஆற்ற வேண்டும். வரும் 2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை, சுயசார்புடைய இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும்.
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘சுயசார்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் பலன்களை நாடு அறுவடை செய்யத் தொடங்கி உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை தேடி வருகின்றன. செமி கண்டக்டர்கள், விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்போன்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வந்தோம். இன்று உலகுக்கு செல்போன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.