ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அத்தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமார் வேட்புமனுக்களை பெற்றார்.
முதல் நாளான நேற்று பிரதான கட்சிவேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர்.
மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி (45), அவர்களது மகள் சத்யா (24) ஆகிய மூவரும் குடும்பத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். விழிப்புணர்வுக்காக மனு தாக்கல் செய்வதாக கூறினர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன், டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார். கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதி நூர்முகமது, காலணியை மாலையாக அணிந்து வந்தார். நாமக்கல் மாவட்டம் ரமேஷ், மகாத்மா காந்தி வேடத்தில் கையில் தராசுடன் வந்தார். மதுரை சங்கர பாண்டியன், போலி ரூபாய் நோட்டுகள், தூண்டில், விழிப்புணர்வு பதாகையுடன் வந்தார்.
‘தேர்தல் மன்னன்’ எனப்படும் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன், 233-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மனிதன் (55) என்பவர் பின்னோக்கி நடந்து வந்து மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்யும்போது, 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்பதுஉள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாததாலும், படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாததாலும், 7 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். பத்மராஜன், நூர்முகமது, அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் ரமேஷ், நாடாளும் மக்கள் கட்சியின் தனலட்சுமி ஆகிய 4 பேர் மனுக்களை அளித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் 3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அடுத்தடுத்த நாட்களில் மனுதாக்கல் களைகட்டும் என தெரிகிறது.
பார்வையாளர்கள் நியமனம்: தேர்தலுக்கான பொது பார்வையாளராக சிக்கிம் மாநில ஐஏஎஸ் அதிகாரியான ராஜ்குமார் யாதவ், காவல் துறை பார்வையாளராக மேற்கு வங்க மாநில ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமார் சடிவே ஆகியோரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.