பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் மதியம் தொழுகை நடைபெற்றது.
இந்நிலையில் தொழுகையை இமாம் தொடங்கிய அடுத்த சில வினாடிகளில் முதல் வரிசை யில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். மதியம் 1.40 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் கள் மீது விழுந்தது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
சம்பவ இடத்தில் இரவு முழுவதும் நீடித்த மீட்புப் பணி நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.
தொடர்ந்து பலரது உடல்கள் மீட்கப்பட்டதாலும் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு இதுவரை 100 பேர் இறந்ததாகவும் 221 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குண்டுவெடிப்பு நடத்தியதை தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தலை கண்டுபிடிப்பு: குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கருதப்படும் தற்கொலைப் படை தீவிரவாதியின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்பு அதிகாரிகள் நேற்று மீட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.