சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சு குறித்து பாஜக மற்றும் அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், நேற்று பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பால் கனகராஜ், நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் புகார் மனு அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெறாது என்பதற்கான ஆதாரங்களை அண்ணாமலை சார்பில் பாஜக நிர்வாகிகள் அளித்துள்ளோம். அமைச்சர்களின் பேச்சு அடங்கிய ஆடியோ, வீடியோ ஆதாரங்களை அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.
போதுமான ஆதாரங்கள் உள்ளன: முறையான தேர்தல் நடைபெற வருவாய், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் அளித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் போலியான வெற்றியைப் பெறவேண்டும் என்பதற்காக அனைத்து விதமான அத்துமீறல்கள், ஜனநாயக விரோத செயல்களை திமுக அரங்கேற்றி வருகிறது. அதற்கு முத்தாய்ப்பாக அமைச்சர் நேருவின் பேச்சு அமைந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதுகின்ற வகையில்தான் இருக்கும். மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதையுமே கண்டுகொள்ளாத சர்வாதிகார அரசாக செயல்பட்டு வருகிறது. இது 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.
முறையான தேர்தல் நடைபெற வருவாய், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும்.