கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்
“அரசுக்கு எதிரான கருத்துகளை, நாட்டுக்கு எதிரான கருத்து என்று பேசுவது, அதைத் தடை செய்வது என ஜனநாயகத்துக்கு எதிரான வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது மோடி அரசு. அவசரகால நிலையை நடைமுறைக்குக் கொண்டுவந்து, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்திருப்பது அதன் தொடர்ச்சிதான். ‘எல்லையைப் பாதுகாக்கக் கூட துப்பில்லாத அரசு’ என்று சொன்னால், ‘அய்யோ நம் ராணுவ வீரர்களை அவமானப்படுத்திவிட்டார்கள்’ என்று பிரச்னையை திசை திருப்புபவர்கள்தான் பா.ஜ.க-வினர். அதே பாணியில், சிறுபான்மையினரை திட்டமிட்டுக் கொன்று குவித்த இவர்களது குஜராத் குரூரத்தை அம்பலப்படுத்திய ஆவணப்படத்தை, ‘இது இந்தியாவுக்கு எதிரான படம்’ என்கிறார்கள். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் வந்தபோது, அதைப் பொதுமக்கள் பார்க்க வேண்டும் என்று விடுமுறை அளித்தார்கள், வரிவிலக்கு தந்தார்கள். வீதிதோறும் அந்தப் படத்தைக் காட்சிப்படுத்தினார்கள். இவர்களுக்குப் பயனளிக்கிற பிரசாரப் படம் என்றால் ஆதரவு தருவார்கள்… இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் என்றால் தடைவிதிக்கிறார்கள். உண்மையில், இந்தத் தடையின் காரணமாக இன்று உலக அளவில் பிபிசி ஆவணப்படம் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்ப்புகளே இல்லாத நிலையை உருவாக்கவும், எதிர்ப்பவர்களை அடியோடு அழிக்கவும் நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி, `India: The Modi Question’ எனும் ஆவணப்படத்திலிருந்து தொடங்குகிறது.
’’கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“பிபிசி-யின் உள்நோக்கம்கொண்ட ஆவணப்படத்தைத் தடைசெய்தது முழுக்க முழுக்க சரிதான். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பிரிட்டனை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது. ஜி20 மாநாட்டுக்குத் தலைமையேற்கும் நிலையை அடைந்திருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத அந்நிய சக்திகள் திட்டமிட்டு உருவாக்கியதுதான் இந்த ஆவணப்படம். பிபிசி அவர்கள் நாட்டில் நடக்கும் தவறுகளைக் குறித்து ஆவணப்படம் வெளியிடட்டும். யார் வேண்டாம் என்று சொல்வது… இந்த ஆவணப்படத்தைப் பிரதமருக்கு எதிரானதாக மட்டும் பார்க்கக் கூடாது. இது இந்தியாவுக்கு எதிரானது. இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் படத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது என்பதிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டாமா… காஷ்மீரில் பிரிவு 370 ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு அங்கு 58,000 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு போரில்கூட இத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்களா என்பது சந்தேகம்தான். காங்கிரஸ் மறைத்துவைத்திருந்த விவகாரத்தை ஒரு கலைஞன், `காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று படமாக எடுத்தார். அதை இந்த நாடே வரவேற்றுப் பார்த்தது. அதையும் இதையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நம் பாரதப் பிரதமருக்கு எதிராகச் சில தீயசக்திகளும், தீவிரவாத சக்திகளும் கைகோத்துக்கொண்டு இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தவே இந்த ஆவணப்படத்தை பகிரங்கமாக ஆதரிக்கிறார்கள்.’’