Kia EV9: என்னது, லேண்ட்ரோவர் மாதிரி இருக்கு?

EV9: என்னது, லேண்ட்ரோவர் மாதிரி இருக்கு?

கியாவின் அடுத்த அட்ராக்ஷன் இந்த EV9. ஏற்கெனவே EV6 விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க, செமையான டிசைனில்… இதற்கு அடுத்த மாடலாக EV9 எனும் கான்செப்ட் மாடலைக் காட்சிப்படுத்தியது கியா. ஆனால், இது கான்செப்ட்தான் எனும்போது, புரொடக்ஷன் மாடலில் என்னென்ன காலியாகும் என்று தெரியவில்லை. முதலில் இந்த கான்செப்ட் EV9–ல் என்ன இருக்குனு பார்க்கலாம்.

EV9

இதுவும் ரேஞ்ச்ரோவரைத்தான் நினைவுபடுத்தியது. பார்ப்பதற்கே கொஞ்சம் ரக்கட் ஆன முரட்டுப் பையனாக இருந்தது இந்த EV9. சதுர வடிவ டிசைன் மீது கியாவுக்கு இப்போ என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. இதுவும் சதுரமாக இருந்தது. அதே Tiger Nose கிரில், பிளாங்க்ட் அவுட் பேனல், எல்இடி லைட் மாட்யூல்கள், Z வடிவ ஹெட்லைட் க்ளஸ்ட்டர் என்று கலக்கலாக இருக்கிறது EV9.

இதன் சி பில்லருக்குப் பக்கவாட்டிலேயே பெரிய கிளாஸ் வடிவ ஹவுஸிங் இருந்தது. நன்றாக வேடிக்கை பார்க்கலாம். டெயில் லைட்கள், செங்குத்தாக இருந்தன. காரே கொஞ்சம் உயரமாக இருந்தது. Rear Hinged என்று சொல்லக்கூடிய பின் பக்கம் திறக்கக் கூடிய கதவுகள், B பில்லர், ஹெட்லாம்ப் க்ளஸ்டர் போன்றவை தயாரிப்பு மாடலில் இல்லாமல் இருக்கலாம். எனக்கு ஓவர்ஆலாக இதைப் பார்ப்பதற்கு லேண்ட்ரோவர் டிஃபெண்டர் அல்லது மெர்சிடீஸ் பென்ஸ் G-வேகன் போல் இருந்தது.

EV9

இந்த EV9 – 4,929 மிமீ நீளமும், 2,055 மிமீ அகலமும், 1,790 மிமீ உயரமும் இருந்தது. இது கிட்டத்தட்ட ஒரு ரேஞ்ச்ரோவரின் டைமன்ஷன்களுக்கு இணையானவை. இதன் வீல்பேஸ் 3,100 மிமீ. ஒரு எலெக்ட்ரிக் காரில் இதுதான் அதிகமான வீல்பேஸாக இருக்கப் போகிறது. கியாவின் e-GMP (Electric Global Modular Platform)-–ல்தான் இது ரெடியாகிறது.

இதன் உள்ளேயும் மினிமலிஸ்ட்டிக் டிசைன் தெறிக்கிறது. ட்வின் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Spoke-less ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல்… அட எங்கேயும் பிசிக்கலாக வேலை செய்யும் பட்டன்கள் இல்லை; எல்லாமே டச்தான். இதன் ஆம்பியன்ட் லைட்டிங் செமையாக இருந்தது.

EV9

இந்த கான்செப்ட்டில் 3 வரிசை சீட் இருந்தது. 2–வது வரிசையை முழுவதுமாக மடித்து ஃப்ளாட் ஆக்கிக் கொள்ளலாம். இது அட்டானமஸ் டிரைவிங் வசதிகளுடன் வரலாம். அதுவும் லெவல்–3 என்று பேச்சு அடிபடுகிறது. இதில் OTA (Over the Air) மற்றும் FOD (Feature on Demand) கம்பேட்டிபிலிட்டி அப்டேட்களுடன் வரும். வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

EV9

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 77.4kWh பேட்டரி பேக் பொருத்தி இருந்தது கியா. டூயல் எலெக்ட்ரிக் மோட்டார், டாப் எண்டில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் என்று அனைத்து அம்சங்களும் உண்டு. இதன் ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் வெறும் 5 விநாடிகளுக்குள் இதன் 0–100 கிமீ பெர்ஃபாமன்ஸ் இருக்கலாம். இதன் ரேஞ்ச் சுமார் 540 கிமீ இருக்கலாம் என்கிறார்கள். புரொடக்ஷன் மாடலில் இதுவும் உறுதியாகத் தெரியவில்லை.

கியாவின் இந்த e-GMP ப்ளாட்ஃபார்மில் ஒரு ஸ்பெஷல் இதன் சார்ஜிங். இது 800V எலெக்ட்ரிக்கல் ஆர்க்கிடெக்ச்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் கார். இது அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உண்டு. வெறும் 20 நிமிடங்களில் 20–80% சார்ஜ் ஏறும் 350kW Rapid சார்ஜிங் இதில் கொடுக்கப் போகிறது கியா.

EV9

இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஐரோப்பாவில் இதைத் தனது ஃப்ளாக்ஷிப் மாடலாக இதை லாஞ்ச் செய்ய இருக்கிறது கியா. அதற்கப்புறம் நம் ஊருக்கு! அநேகமாக இந்த EV9 வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கலாம்.

கியா KA4 அல்லது கார்னிவல் நெக்ஸ்ட் ஜென்
11 சீட்டர் கார்னிவல் நம் ஊருக்கு வருமா?

கியா KA4 அல்லது
கார்னிவல் நெக்ஸ்ட் ஜென்

முதலில் கியா ஷோரூமுக்குப் போன போது, ‘என்னடா இது லேண்ட்ரோவர் கார் இங்க நிக்குது’ என்றுதான் நினைத்தேன். ஆனால், அது லேண்ட்ரோவர் இல்லை; கியாவின் பெவிலியன் அது. ஆம், EV9 எனும் கான்செப்ட் எலெக்ட்ரிக் மற்றும் KA4 எனும் பெரிய்…ய எம்பிவி என்று பரபரப்பாக இருந்தது கியா.

முதலில் KA4 பற்றிப் பார்க்கலாம். வேறொன்றுமில்லை நண்பர்களே… கியாவின் கார்னிவல் காரின் நெக்ஸ்ட் ஜென் மாடலைத்தான் இம்மாம் பெருசாக டிசைன் செய்து, காட்சிப்படுத்தி இருந்தது கியா. இதன் குறியீட்டுப் பெயர்தான் KA4.

இது பொதுவாகப் பார்த்தால், கார்னிவல் காரின் 4–வது ஜென் மாடல். கியா குளோபலாக இதை இறக்கியபிறகு, 2 ஆண்டுகள் கழித்து நம் ஊர் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த KA4 காரைக் காட்சிப்படுத்தி இருந்தது. ஏகப்பட்ட சீட்டிங் ஆப்ஷன்கள் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வந்திருக்கும் கார்னிவல் நெக்ஸ்ட் ஜென் மாடல் பற்றி ஒரு சின்ன வியூ.

வெறும் எம்பிவி என்று ஒதுக்கிவிடக் கூடாது என்று, இந்த KA4–யைப் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறது கியா. இதை ஒரு எஸ்யூவி ஜீனிலும் கலந்தடித்து உருவாக்கி இருக்கிறார்கள். பின் பக்கம் சதுர வடிவில் இருந்தால், சில கார்கள் சொதப்பிவிடும். ஆனால், லேண்ட்ரோவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்த KA4–ம் அப்படித்தான். சதுர வடிவ பின் பக்கமும், அங்கங்கே ஆங்குலர் கோடுகளும் எஸ்யூவியாகக் கெத்து காட்டுகிறது. கியாவின் பிராண்டான ‘புலி மூக்கு’ கிரில் இதிலும் உண்டு. இது டைமண்ட் பேட்டர்னில் இருக்கிறது. இத்தனை பெரிய காருக்கு, ஸ்லீக்கான ஹெட்லைட்ஸ், செம ஸ்டைல். லோயர் ஏர் இன்டேக்குக்கு க்ரோம் வேலைப்பாடுகள் என்று கலக்கல் எஸ்யூவியாக இருக்கிறது.

கியா KA4 அல்லது
கார்னிவல் நெக்ஸ்ட் ஜென்

சில கேரக்டர் லைன்கள் எம்பிவி லுக்கையும் விட்டுக் கொடுக்கவில்லை. ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸை அது இணைக்கும் விதம் அருமை. C பில்லரைக் கவனித்தேன். ஒரு அலுமினியம் ட்ரிம் கொடுத்திருந்தார்கள். இதுவே மற்ற A, B, D பில்லர்களுக்கு பிளாக்ட் அவுட் ஃபினிஷ் இருந்தது. கியாவின் ஃபேவரைட்டான படுக்கை வச எல்இடி டெயில் லைட் பார், காரின் அகலம் முழுதும் பயணிப்பது அழகு!

நடப்பு கார்னிவல்–லில் பட்டன் மற்றும் லேயர்டு டிசைன் இருந்தால்… இது கொஞ்சம் மினிமலிஸ்ட்டிக் டிசைனில் கலக்குகிறது. டூயல் 12.3 இன்ச் டிஸ்ப்ளே சென்டர் கன்சோலை நிரப்புவது அழகு. பவர்டு முன் பக்க சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜர், ப்ரீமியம் சரவுண்ட் சிஸ்டம், அடாஸ் தொழில்நுட்பம், ஏகப்பட்ட காற்றுப்பைகள் என இருக்கும் எல்லா வசதிகளையும் கொட்டிவிட்டது கியா.

இந்த KA4–ன் முக்கியமான விஷயமே – இதன் சீட்டிங்தான். குளோபலாக 7, 9 மற்றும் 11 என ஏகப்பட்ட சீட்டிங் ஆப்ஷனில் கிடைக்கிறது இது. நம் ஊருக்கு 11 சீட்டர் வந்தால்… எப்படி இருக்கும்! ஆத்தீ! இந்தியாவின் நீளமான வீல்பேஸும், அதிக சீட்டிங் வசதியும் கொண்ட காராக இருக்கும் இந்த KA4.

மற்ற நாடுகளில் பெட்ரோல்/டீசல் என இரண்டிலும் ஓடினாலும்… இந்தியாவுக்கு முதலில் டீசலைத்தான் கொண்டு வரத் திட்டம் போட்டிருக்கிறதாம் கியா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.