தேர்தல் மன்னன் பத்மராஜன் 233-வது முறையாக மனு தாக்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் காலை வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய்க்கிழமை துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெற்றார்.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (65) 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் மேட்டூர் எனக்கு சொந்த ஊர்.பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.

இதுவரை 32 எம்.பி., தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 72 சட்டமன்ற தேர்தல், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன்.பின்னர் நான் தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன் என்று கூறினார்.

இவரை தொடர்ந்து கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நூர்முகம்மது(63) என்பவர் காலணிகளை கோர்த்து மாலை அணிந்து வந்தார். மஞ்சள் துண்டை தோளில் போட்டு, பச்சை துண்டை தலையில் கட்டி இருந்தார். மக்களுக்கு நாயாய் உழைப்பேன், காலணி போல் தேய்வேன் என்பதை உணர்த்தும் வகையில் காலணி மாலை அணிந்து வந்தாகவும், இதுவரை 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ்(42) என்பவர் காந்தி போல உடையணிந்து தராசுடன் வந்து மனுத்தாக்கல் செய்தார். 10 ரூபாய் நாணயமாக 10,000 ரூபாயை கொண்டு வந்து தேர்தல் கட்டணம் செலுத்தினார். மனு மற்றும் ஆவண குறைபாட்டால் மனு ஏற்கப்படவில்லை. மீண்டும் சிறிது நேரத்தில் வேட்பு மனுவை சரி செய்து தாக்கல் செய்தார். இதுவரை 10 முறை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.