Jharkhand Fire Broke Out: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை என ஜார்க்கண்ட் தலைமை செயலர் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், மூன்று குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தை அடுத்த பிரதமர் மோடி,”தன்பாத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பொதுமக்கள் உயிர்ழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தனது குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என ட்வீட் செய்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரணத்தொகையில் இருந்து, ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் அவசரகால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். இதுகுறித்து, ஹிந்தி மொழியில் ட்விட்டரில் அவர்,”தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் இறந்தது இதயத்தை உலுக்குகிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நான் தனிப்பட்ட முறையில் அதை கண்காணித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 160 கி.மீ., தொலைவில் உள்ள நகரத்தின் பரபரப்பான பகுதியான ஜோரபடக்கில் உள்ள 13 மாடிக் கட்டிடமான ஆஷிர்வாத் டவரில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக பெயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தன்பாத் துணை காவல் ஆணையர் சந்திப் குமார் கூறுகையில்,”காயமடைந்தவர்களை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். மீட்பு பணிகள் நிறைவடைந்தன. இருப்பினும், எத்தனை பேரை மீட்டோம் என்பது குறித்து முறையாக எண்ணிக்கை செய்யப்படவில்லை. தீயணைப்பு மற்றும் போலீசார் இணைந்து அதுகுறித்து அறிவிப்போம்.
எங்களது உடனடி குறிக்கோள் அங்கிருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. தற்போது அங்கு மீண்டும் முழுமையாக சோதனை செய்து வருகிறோம், அங்கு வேறு யாருமில்லை என்பதை உறுதிசெய்வதற்காக. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பூஜைகள் நடைபெற்றதாக அப்பகுதியினர் கூறியிருந்தனர். ஆனால், அதுகுறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை” என்றார்.