மால்டா: குடியுரிமை திருத்த சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர், புத்தமத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இச்சட்டத்தின் கீழ், விதிமுறைகளை அரசு இன்னும் வகுக்கவில்லை. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் கடந்த 1950-ம் ஆண்டுகளில் வங்கதேசத்திலிருந்து மதுவா இனத்தினர், மதரீதியான துன்புறுத்தல் காரணமாக மேற்கு வங்கத்தில் குடியேறினர்.
இந்நிலையில், மேற்குவங்கத்தின் மால்டாவில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த மதுவா இன மக்களின் நலனில் திரிணமூல் கங்கிரஸ் கட்சி எப்போதும் அக்கறை கொள்கிறது. ஆனால், தேர்தல் நெருங்கும் போது குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் அவர்களை ‘நண்பனாக ’ அணுக பாஜக முயற்சிக்கிறது. மக்களை மத்திய அரசு குழப்புகிறது’’ என்று தெரிவித்தார்.