திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டு கவுன்சிலரான முத்துசெல்வம், “டெண்டர் நோட்டீஸே எங்களுக்கு கொடுக்காம நீங்க எப்படி டெண்டரை நடத்தலாம். டெண்டர்ல எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க… எங்களை கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா. நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஒகே ஒகேன்னு சொல்றதுக்கு..! என்ன வெளிப்படையா நடந்துக்குறீங்க. உட்கார்ந்துக்கிட்டு இருக்க சீட்டோட மரபுக்கு தகுந்த மாதிரி பேசுங்க. நான் ரொம்ப அடக்கி ஒடுக்கி தான் பேசுறேன்” என மேயர் அன்பழகனை நோக்கி சரமாரியாகக் கேள்வியெழுப்ப, மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு உண்டானது.
இதற்கு மேயர் அன்பழகன், “பேப்பர்ல எல்லாம் விளம்பரம் கொடுத்து வெளிப்படைத்தன்மையாக எல்லாம் நடக்குது. தனிப்பட்ட முறையில பேசக்கூடாது. உக்காருப்பா” என பிரச்னையை சமாளித்தார்.
மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்களே ஒவ்வொரு கூட்டத்திலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.