வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: அபுதாபியில் இருந்து, மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் அடாவடியாக நடந்து கொண்டதுடன், விமான ஊழியர்களை தாக்கிய இத்தாலி பெண்ணை, மும்பை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில், ‘விஸ்தாரா’ விமானம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருச்சியோ, 45, என்ற பெண் அடாவடியாக நடந்து கொண்டார். சாதாரண வகுப்பில் அமர்ந்திருந்த அவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று, முதல் வகுப்பு இருக்கையில் அமர முயற்சித்தார். இதை விமான ஊழியர்கள் தடுத்தனர். அப்போது ஊழியர்களின் முகத்தில் அந்த பெண் பலமாக தாக்கினார்.
பின், தான் அணிந்திருந்த உடைகளில் சிலவற்றை கழற்றி வீசினார். அரை நிர்வாண கோலத்தில் விமானத்தில், அங்கும் இங்கும் நடந்தார். விமானத்தின் பைலட் பலமுறை எச்சரித்தும், அந்த பெண் கேட்கவில்லை. இதையடுத்து விமானம் மும்பையில் தரையிறங்கியதும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மும்பை போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதுடன், சக பயணியரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement