ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள ஆசிர்வாத் டவர் என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 40 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கட்டடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டனர். 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர தீ விபத்தில் சிக்கி 10 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துவிட்டனர். தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “மீட்புப்பணிகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மீட்புப்பணிகளை நேரடியாக நான் கவனித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் கூறுகையில், “காயம் அடைந்தவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டுவிட்டது. எத்தனை பேர் இறந்தனர் என்று இன்னும் இறுதி விபரம் தெரியவில்லை” என்று தெரிவித்தார். “`தீவிபத்து என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்டடத்தில் யாரோ பூஜை செய்தபோது தீப்பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில ஆளுநர் ரமேஷும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர். இத்தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்திருக்கிறது.