மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோழஅழகுபுரம் அடுத்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார்.
இவர் ஜெய்ஹிந்த்புராம் அருகே நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது கடை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த மர்ம நபர்கள் அறிவால் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சையாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு தலைமை காவலர் ஹரிஹர பாபு மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு மற்றும் நகை தொழிலுக்காக கொடுத்த கடனை திரும்பி கேட்டதில் ஏற்கனவே தகராறு இருந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் தலைமை காவலர் ஹரிஹர பாபுவிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கூலிப்படையை ஏவி இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து 7 பேர் கொண்ட கூலிப்படையினரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.