அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி:
யாரையும் தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை, அ.தி.மு.க.,விற்கு இல்லை. நாங்கள் யாருக்கும் எஜமானரும் இல்லை; அடிமையும் இல்லை. ஈரோடு தேர்தலில் மக்கள், பழனிசாமி பக்கம் உள்ளனர்.
அப்ப, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வீட்டிற்கு டீ சாப்பிடவும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டிற்கு டிபன் சாப்பிடவும் தான், உங்க தலைவர்கள் போனாங்களா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
மேட்டூர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில்தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. காவிரி பாசன மாவட்டங்களின்பல பகுதிகளில், சம்பா நெற்பயிர்கள் கதிர் முற்றியிருக்கும் நிலையில், திடீரென நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும், 20 சதவீதம்பரப்பளவிலான பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. பிப்., 15 வரை காவிரியில் தண்ணீர் திறந்து விட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
வங்கக் கடலில் புயல் உருவாகி, டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டப் போகுதுன்னு வானிலை ஆய்வு மையம் சொன்னதால, அணையை மூடி இருப்பாங்களோ?
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
மருத்துவ துறையில், பெரும்பாலான தலைமை பதவி இடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை, தி.மு.க., ஆட்சியில் காணப்படுகிறது. இது, கடும் கண்டனத்துக்கு உரியது. தி.மு.க., அரசின் திறமையின்மைக்கு, மற்றொரு எடுத்துக்காட்டு. அரசின் மெத்தனப்போக்கு காரணமாக, மருத்துவ சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
‘தலைமை பதவி’ சம்பந்தமான பஞ்சாயத்துன்னாலே, இவரு ஆவேசம் ஆயிடுறாரே!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:
காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல், ஒரு நாளும் என் வாழ்வு கடந்ததில்லை. முயற்சித்தால் யாரும் காந்தியாக முடியும். இதற்கு சாட்சியாக, எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்; காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன்.
‘காங்., கூட்டணி கரை சேர்க்குமா… கேட்ட, ‘சீட்’களை ராகுல் காந்தி தருவாரா’ என்று யோசனை பண்ணிட்டு இருப்பதை, இப்படி மாத்தி சொல்றாரோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
சென்னையில் அனைத்து இடங்களிலும், பள்ளிகளில் இருந்து, 500 மீட்டர் தொலைவுக்குள், குறைந்தது மூன்று இடங்களிலாவது பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளை தகர்த்து, பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினேன். காந்தி நினைவு நாளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தச் சட்டத்தை, அவரது நினைவு நாளில் இருந்தாவது கடுமையாக செயல்படுத்த வேண்டும்.
சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினா, நம்ம போலீசாருக்கு மாமூல் வாங்க, இன்னொரு வழி பிறக்கும் என்பது தான் உண்மை!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்