தேனி : கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப்பள்ளி மாணவர்கள் – வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! 

தேனி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில், 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும்,  தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்களும் உள்ளனர். 

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் இருக்கும் இரண்டு மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, பின்னர் அந்த தண்ணீர் குழாயை மூடி விட்டு செல்கின்றனர்.

இதேபோன்று, புகைப்படங்களிலும் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை துடப்பத்தால் அகற்றுமாறும், மாணவர்கள் ஒட்டடை அடிப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த வீடியோவைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் உடனடியாக சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். 

அங்கு, மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளியில், மாணவர்களை கழிவறையில் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.