பெங்களூரு: டெல்லி எம்எல்ஏவும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி சிங் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆட்சியை பார்த்து மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் 3 கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. ஊழல், வாரிசு அரசியல், தொலைநோக்கு இல்லாத திட்டங்கள் ஆகியவற்றால் அந்த கட்சிகள் மீது கோபம் கொண்டுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய மொஹல்லா கிளினிக் போன்று ‘நம்ம கிளினிக்குகளை’ பாஜக அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது. மக்களுக்கு சுகாதார சேவையை வழங்க வேண்டும் என நினைத்திருந்தால் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் செயல்படுத்தவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில் அவசர கதியில் செயல்படுத்துகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்ததும் 200 யூனிட் மின்சாரம் அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக வழங்கியது. இதனை காப்பி அடித்தே காங்கிரஸ் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும். டெல்லியை போல மக்கள் நலத்திட்டங்கள் நிறைந்த ஆட்சியை கர்நாடக மக்களுக்கு வழங்குவோம். எங்களது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதிஷி சிங் தெரிவித்தார்.