கோவையில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவாகர் (26), கண்ணையா (30), பார்வதி (67) முத்தம்மா (23), கீதா (24) ஆகிய ஓரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட கோவை ஆர்எஸ்.புரம் காவல் சரகர் மாநகர காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், பி1 பஜார் காவல் நிலைய புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, பி2 ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, பி1 பஜார் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்த்திக் பூபதி ஆகியோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் பாராட்டினார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் சந்தீஷ்,; சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்கனவே 40 கேமராக்கள் இருக்கும் நிலையில், கூடுதலாக 36 கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கப்பட உள்ளோம். செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகிறோம், பேருந்துகளில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்டறிய பேருந்துகளில் கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM