ஜெனீவா: ‘நான்காவது ஆண்டுக்குள் அடி எடுத்தும் வைக்கும் கொரோனா வைரஸ், உலகளாவிய சுகாதார அவசரநிலையாக தொடர்கிறது. இந்த நோய்த் தொற்று நீண்டகாலத்துக்கு மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், 2019 டிச., மாதம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தென்பட்டது. இது, உலகெங்கும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, உலகெங்கும், 75.25 கோடி பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கும், 1,310 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசிஸ் நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன், இதே நாளில், கொரோனா வைரஸ் உலகளாவிய மிகப் பெரும் சுகாதார அவசரநிலை என்று அறிவித்தேன். தற்போது நிலைமை ஓரளவுக்கு மேம்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக உள்ளது.
கடந்தாண்டு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது.கொரோனா வைரஸ், கணிக்க முடியாத காலம் வரை, மனிதர்கள் மற்றும் விலங்குகளை நிரந்தரமாக தாக்கக்கூடிய நோய்த் தொற்றாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனா வைரசை தற்போதைக்கு அழிக்க முடியாது. அதே நேரத்தில், இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.
தடுப்பூசி போடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உரிய பரிசோதனைகள் செய்வது, பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.கடந்த டிசம்பரில் இருந்து எட்டு வாரங்களில், 1.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement