21ம் நூற்றாண்டின் உலகின் ஆகப்பெரும் தொற்றுநோயாக 2019ம் ஆண்டின் டிசம்பரில் அறிமுகமான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகள் முழுமையடைந்த பிறகும் இதுகாறும் தொற்று பரவல் முற்று பெறவில்லை.
பொதுவாக நாசி வழியாகவோ அல்லது தொண்டை வழியாகவோ சளி மாதிரி எடுத்து பரிசோதித்த பிறகே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்ற நடைமுறையை மருத்துவ உலகம் பின்பற்றி வருகிறது. இதனை உடனடியாக அறிந்துகொள்ள ரேபிட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த ரேபிட் கொரோனா கிட்-கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதிலும் உலகளவில் பல வகையான முறைகேடுகள் நடைபெறுவதும் தவறவில்லை.
இப்படி இருக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதில் மற்றும் உடனடியாக கண்டறியும் வகையிலான புதிய கண்டுபிடிப்பை நொய்டாவைச் சேர்ந்த இளம் மூத்த அறிவியலாளர் அமித் தூபே கண்டுபிடித்திருக்கிறார். அது என்னவெனில், வியர்வையை வைத்து ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு பயோ சென்சார் கருவி.
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், பெருநகர நொய்டாவில் உள்ள குவாண்டா கால்குலஸில் மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் அமித் தூபே (34) கொரோனாவை கண்டறிய பயோ மெடிக்கல் மற்றும் பயோ சென்சிங் பயன்பாடுகளுக்கான உலகின் முதல் நம்பகமான சிறிய வகை அல்ட்ரா நானோ க்ளஸ்டர்களை உருவாக்கியிருக்கிறார்.
இந்த வகை பயோ சென்சார் கொண்ட நானோ க்ளஸ்டர்கள் வழக்கத்தில் இருக்கும் ரேபிட் கிட்களுக்கு ஆகும் செலவை விடவே குறைவு என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் மற்றும் வேதியியலுக்கான Luminescence (ஒளிர்வு) இதழிடம் அமித் தூபே விளக்கியிருக்கிறார்.
அதில், “பயோ சென்சார்களில் உணர்வு திறன் நுட்பமாக இருக்கும். 2 நானோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட இந்த சிறிய அல்ட்ரா நானோ க்ளஸ்டர்கள், இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் கவனத்தை ஈர்க்கவல்லது. இதில் ஒளிர்வு திறனும், உயிர் இணக்கத்தன்மையும் அடங்கும். குறைந்த விலையிலான இந்த பயோ சென்சார் ஆராய்ச்சி அடுத்த தலைமுறைக்கும் வழி வகுக்கும் என நம்புகிறேன்.” என்று அமித் தூபே தெரிவித்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM