தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே யானை தாக்கி காயமடைந்து சிகிச்சை பெறுபவரை ஜி.கே.மணி எம்எல்ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் (65). இவர் தனது நிலத்தில் சிறிய குடிசை ஒன்றை அமைத்து வைத்துள்ளார். நிலத்தில் கட்டி வைத்துள்ள கால்நடைகள் மற்றும் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு இரவில் காவல் பணி மேற்கொள்ள இந்த குடிசையில் படுத்துக் கொள்வதை மாணிக்கம் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த குடிசையில் நேற்று இரவு வழக்கம்போல் படுத்து உறங்கியுள்ளார். இன்று (புதன்) அதிகாலை அவ்வழியாக வந்த ஒற்றை யானை ஒன்று குடிசையுடன் சேர்த்து மாணிக்கத்தை தூக்கி வீசியுள்ளது. இதில் மாணிக்கம் மயங்கியதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றுள்ளது. விடிந்த பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் மயங்கிக் கிடப்பதை பார்த்துள்ளனர்.
உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பெற்று வரும் மாணிக்கத்தை பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினரும், பாமக-வின் கவுரவத் தலைவருமான ஜி.கே.மணி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மாணிக்கத்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் விவரம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மாணிக்கத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களிலும், விளைநிலங்களிலும் முகாமிட்டு சுற்றிவரும் யானைகள் தற்போது மனிதர்களை தாக்கத் தொடங்கியுள்ளன.
எனவே, விபரீதங்கள் எதுவும் நிகழும் முன்பாக யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.