சென்னை தரமணியில் இருக்கும் ஐஐடி வளாகத்தில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கடந்த ஜன., 31-ம் தேதி தொடங்கியது. 3 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஜி20 நாடுகளின் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்ட கண்காட்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, “தமிழக மாணவர்கள் இடையே ஆங்கில திறனை அதிகரிப்பதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழக அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் ஒரு வருடத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து அவர், “முதல் நாளிலிருந்தே மாணவர்களை தொழில் சார்ந்த திறனுடையவர்களாக உருவாக்குகிறோம். பொறியியல் தொழிற்கல்வி மட்டுமல்லாது, கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகிறோம். மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பை தொழில் நிறுவனங்களில் வழங்குவதன் மூலம், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன் சார்ந்த மாணவர்களாக மாற்றுகிறோம்” என்றார்.
கருத்தரங்கம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உயர்கல்வித்துறை செயலர் கே.சஞ்சய் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், “நமது தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு பல தரப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இத்தகைய கொள்கைகள் அவசியம்” என்றனர்.
தொடர்ந்து அவர்கள், “அதேபோல், அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை அடுத்த ஒன்றரை ஆண்டில் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த பரிந்துரை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து புனே, அமிர்தசரஸ் போன்ற இடங்களில் கல்வி மாநாடு நடத்தப்பட இருக்கிறது” என்றனர்.