புதுடில்லி: 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: மோடி
பிரதமர் மோடி: நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயன் அடைவார்கள்.
வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; வரி செலுத்தும் நடைமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட். இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி:
* நடுத்தர வர்க்க வரவு செலவுத் திட்டம் இடம் பெற்றுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பெரிதும் உதவும்.
* பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய அறிவிப்புகளைப் பார்க்கும்போது, பட்ஜெட்டில் பெண்களுக்கு மரியாதை அதிகரித்திருப்பதாக நான் நம்புகிறேன்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் லைப்ரரி அறிவிப்பையும் நான் வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்:
தொழில்நுட்பம், சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2023-2024 பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன எனக் கூறியுள்ளார்.
அரியானா முதல்வர்:
* சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நிவாரணம் அளிக்கும் பட்ஜெட் இது. புதிய வருமான வரி விகிதங்கள் தனிநபர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன.
இந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66% உயர்த்தப்பட்டுள்ளது, இதை நான் வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பா.ஜ., எம்.பி தேஜஸ்வி சூர்யா:
* கர்நாடகாவிற்கு சிறப்பு நிதியாக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் மாநிலத்தை மாற்றியமைக்கும் எனக் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ்:
நடுத்தர வர்க்கத்தினருக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் அதே வேளையில், தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது.
விவசாயிகள், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்த பட்ஜெட்டில் ரயில்வேயும் புறக்கணிக்கப்பட்டது. இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் எனக் கூறியுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி:
இந்த பட்ஜெட் கடந்த 8-9 ஆண்டுகளாக வந்த அதே பட்ஜெட். வரிகள் அதிகரித்துள்ளன. வரியால் பொதுமக்கள் பயனடைய வேண்டும். ஆனால் இந்த பட்ஜெடில் எதுவும் இடம் பெறவில்லை எனக் கூறியுள்ளார்.
காங்., எம்.பி சசி தரூர்:
* 2023-2024 பட்ஜெட்டில் சில நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் ஏழை கிராமப்புற தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்