திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே நேற்று மாலை ஆட்டோ டிரைவரின் அவசர நடவடிக்கையால் எதிர் திசையில் வந்த கார், ஷேர் ஆட்டோமீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்தில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூரைச் சேர்ந்தவர் தசரதன் (50). இவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவை, நாவலூர் மற்றும் திருப்போரூர் இடையே வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு தசரதன் ஷேர் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார்.
காலவாக்கம் அருகே ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் நின்றிருந்தன. இதனால் சிறிது நேரம் ஆட்டோவை நிறுத்திய தசரதன், அவசர நடவடிக்கையாக ஓஎம்ஆர் சாலைத் தடுப்பில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி, எதிர்திசையில் பயணிகளுடன் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அப்போது கேளம்பாக்கம் நோக்கி ஆலத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணியுரியும் தாமஸ் மாத்யூ என்பவர் ஓட்டி வந்த கார், ஷேர் ஆட்டோவின்மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர், பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பெண்கள் உள்பட 9 பேரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும், விபத்தில் சேதமான கார், ஷேர் ஆட்டோவை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா (44), சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி (53) ஆகிய 2 பெண் கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த சுவாதி (32), ஜோதி (52), செல்வி (40), அஞ்சலை (38), திலகவதி (45), முனுசாமி (எ) சுரேஷ் (50), ஷேர் ஆட்டோ டிரைவர் தசரதன் (50) ஆகிய 7 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவரின் அவசர நடவடிக்கையால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.