தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் 4 பிரிவு சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், கோயில்பத்து, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். 30 நாளே ஆன இப்பயிருக்கு தற்போது தண்ணீர் தேவைப்படும் நிலையில், கல்லணையில் தண்ணீர் குறைந்தளவே வழங்கப்படுகிறது. இதனால் இக்கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களின் நிலை கேள்விக் குறியாகும்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் தண்ணீர் திறக்காததால், இன்று பூதலூர் 4 பிரிவு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி,கண்ணன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என். சுந்தரவடிவேல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி பாஸ்கர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயப் பிரிவுத் தலைவர் கலைவேந்தன், விவசாயி பி.ஆறுமுகம் உள்பட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கண்டன முழக்க மிட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.