புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் 2023-2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து பேசுகையில், “இந்த பட்ஜெட் சமூகத்தின் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும். இந்தியா வளர்ந்த நாடாக உருவாக இந்த பட்ஜெட் வலுவான அடித்தளத்தை அமைக்கும்.
அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் அனைவருக்கும் பலன் தரும். இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய சக்தியைப் பாய்ச்சும். நாட்டை செதுக்குபவர்கள் விஸ்வகர்மாக்கள் தான். அவர்களுக்காக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்குமான பட்ஜெட்” என்று தெரிவித்தார்.
வாசிக்க > வருமான வரிச் சலுகை முதல் நிதி ஒதுக்கீடுகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்