திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வழுதலகுணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை ஏமாற்றி கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சிறுமியின் தந்தை வந்ததால் அவரைப் பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை இது குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.