ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்த இபிஎஸ்! டெல்லி பறக்கிறார் அண்ணாமலை! ஓபிஎஸ் நிலை?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு,  அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கிடையே `தென்னரசு நன்கு அறிமுகமான வேட்பாளர்’ என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பணிமனை இன்று அங்கு திறக்கப்பட்டது. அதில் அதிமுக தரப்பில் தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, பொன்னையன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், தமாகா விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கே பி முனுசாமி, எஸ் பி வேலுமணி, கருப்பண்ணன், கே வி ராமலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவ்விழாவில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தென்னரசு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் அதிமுக பழனிசாமி அணியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும் ஆவார். 
image
அவ்விழாவில் பேசிய எஸ் பி வேலுமணி, “இத்தொகுதியில் யாரை நிறுத்துவது என வேட்பாளர்களுக்கு அதிக போட்டி இருந்ததால் தான் வேட்பாளர் அறிவிப்புக்கு தாமதம் ஆனது” என்று கூறினார். வேட்பாளர் அறிமுகத்தை தொடர்ந்து, பிற்பகலில் வேட்பாளர் தென்னரசு சேலம் சென்றார். அங்கு சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தென்னரசு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம் தமிழ் மாநில கட்சியின் சார்பில் மாநில பொது செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் யுவராஜா  உள்ளிட்டோரும் அங்கு சென்றிருந்தனர். 
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் (தென்னரசு)  பலமான, அத்தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர். அதிமுக தரப்பில் ஈ.பி.எஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்” என்றார். இத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை. விரைவில் அது தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
image
இதற்கிடையே அதிமுக-வின் ஓபிஎஸ் தரப்பு, தாங்கள் எந்த வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி வழங்க உள்ளது. அந்த அறிவிப்பும் வெளிவந்தால் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும்.

ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி, திமுக கூட்டணி ஆகியவை தங்களின் வேட்பாளர்களை அறிவித்து களத்தை பரபரப்பாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.