ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள்ளேயே மும்முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்தது முதல் பாஜக – ஈபிஎஸ் தரப்பில் மனக்கசப்பு இருந்து வருகிறது. அதை சுதாரித்துக்கொண்ட ஓபிஎஸ் ” இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று அறிவித்துவிட்டு உடனே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்துக்கொண்டார். அதே நாளில், எடப்பாடி தரப்பும் பாஜக அலுவலகத்தில் கால்கடுக்க காத்திருந்து பின்னர் அண்ணாமலையை சந்தித்து திரும்பினர்.
அதனை அடுத்து நேற்றைய தினம் முன்னாள் எம்எல்ஏ தென்னரசை ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் இன்று அல்லது நாளை பாஜக அதன் நிலைப்பாட்டை அறிவித்துவிடும் சூழலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி செந்தில்முருகனை ஓபிஎஸ் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
அதே சமயம், பாஜக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் நாங்கள் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்து அண்ணாமலைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை குறித்து ஏற்கனவே அண்ணாமலை தெளிவாக கூறியிருந்தார்; இந்த தேர்தலில் பெரிய கட்சிதான் போட்டியிட வேண்டும் என்று அதிமுகவை மறைமுகமாக கூறிவிட்டு ஆதரவு நிலைப்பாட்டை குறித்து அவர் எதுவும் பேசாமல் நகர்ந்தார்.
மேலும், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நமக்கு 2024 தேர்தல்தான் இலக்கு என்றும் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாஜக யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்பதை பாப்போம் என்ற எதிர்பார்ப்பில் ஓ. பன்னீர்செல்வம் தமது தரப்பில் வேட்பாளரை நிறுத்திவிட்டு அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், அதிமுக தரப்பில் இருவரும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் இரட்டை இல்லை சின்னத்துக்கு மீண்டும் இழுபறி ஏற்பட்டு சின்னம் முடக்கப்படவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.