திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கந்திலி, குருசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகள் உள்ளது. இந்த கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மற்றும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற முறையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள 19 காவல் நிலையங்களில் காவல் நிலைய நுழைவாயிலில் பெண் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காக்கி சீருடை இல்லாமல் வெண்மை மற்றும் பிரவுன் கலர் சீருடை வழங்கப்பட்டு உள்ளது.
இவர்கள் வரவேற்பு நுழைவாயிலில் அமர்ந்திருப்பார்கள். காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் மனுதாரர்களை அழைத்து கனிவாக பேசி காவல்துறையில் உள்ள சட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கியும் புகார் எழுத தெரியவில்லை என்றால் எப்படி புகார் எழுதவேண்டும், எந்த அடிப்படையில் புகார்கள் வழங்க வேண்டும் என்பது குறித்தும் விளக்குவார்கள். இதன்பிறகு புகாரை பெற்றுக்கொண்டு அதற்கான (சிஎஸ்ஆர்) எனப்படும் ரசீது உடனடியாக வழங்கப்பட்டு காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டரிடம் உரிய புகார்தாரரை அனுப்பி அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய வரவேற்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘’திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டு 19 காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு யார் வருகிறார்கள். எத்தனை மணிக்கு உள்ளே செல்கிறார்கள். பின்னர் எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார்கள் என்ற தகவல்களையும் வெளியில் உள்ள நோட்டு புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர். இவர்களுக்கு காக்கிச்சட்டை அணியாமல் பொதுமக்களில் ஒருவனாக குடும்பத்தில் காவல்துறை ஒரு அங்கமாக இருக்க தனி சீருடை அளிக்கப்பட்டுள்ளது’’ என்று மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் கூறினார்.