மும்பையிலுள்ள கல்பாதேவி பனஸ்வாடியில் வசித்தவர் கீதா விர்கர். சமூக சேவகியான இவர், மகேஷ் விஷ்வநாத் (62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ் மது மற்றும் சூதாட்டத்துக்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி கீதாவிடம் மது அருந்த பணம் கேட்டு சித்ரவதை செய்து வந்தார். இதனால் கீதா வீட்டை காலி செய்யும்படி மகேஷிடம் கேட்டுக்கொண்டார். அதனால், மகேஷ் வீட்டைவிட்டு வெளியேறினார். மகேஷும், கீதாவும் 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. திடீரென வீட்டைவிட்டு விரட்டியதால் மகேஷ் கோபத்தில் கீதாவை பழி வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 13-ம் தேதி மகேஷ் ஆசிட் வாங்கி, அதிகாலையில் கீதாவின் வீட்டுக்கு வெளியில் அதை மறைந்து வைத்திருந்தார். காலையில் கீதா வழக்கம் போல் எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்து தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு ஏற்கெனவே வெளியில் ஆசிட்டுடன் பதுங்கியிருந்த மகேஷ், கீதாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்.
உடனே கீதாவின் மகன் ஆதித்யா ஓடி வந்து அவரைக் காப்பாற்ற முயன்றார். அதனால், அவர் மீதும் ஆசிட் வீசப்போவதாக மிரட்டியிருக்கிறார் மகேஷ். அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூடிவிட்டனர். அவர்கள் மகேஷைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தப்பி ஓடிவிட்டார். ஆசிட் வீச்சில் கீதா உடல் முழுக்க காயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கீதா 50 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.