இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஒருவர் தொடர்ந்து இந்தி பாடல்களை பாடியதால் அவர் மீது ரசிகர்கள் பாட்டில் வீசிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயநகரப் பேரரசின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கர்நாடக மாநிலம் ஹம்பியில், அம்மாநில அரசு சார்பில் 3 நாட்கள் ‘ஹம்பி உத்சவம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை பிரபல பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்றார்.
அவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர். நிகழ்ச்சியில் கைலாஷ் கெர் இந்திப் பாடல்களை மட்டுமே பாடினார். அப்போது ரசிகர்கள் கன்னட பாடல்களை பாடுமாறு கூச்சலிட்டனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் கைலாஷ் கெர் இந்தி பாடல்களையே தொடர்ந்து பாடினார். இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது கோபம் அடைந்த ரசிகர் ஒருவர் கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டிலை அவர் மீது வீசினார்.
அதையும் பொருட்படுத்தாமல் கைலாஷ் கெர் தொடர்ந்து இந்தி பாடலை பாடினார். சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் அந்த பாட்டிலை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
மேடைக்கு வந்த போலீஸார் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்த பிரதீப் (22), சுரேந்தர் (21) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in