வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக ஒன்றாவது எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி மற்றும் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பெலத்தூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் செல்வதற்காக வந்த மிதவை கப்பல் ஒன்று பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக பாம்பன் குருசடைதீவு அருகே கடந்த நான்கு நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புயல் சின்னம் ஓய்ந்த பிறகு இந்த மிதவை கப்பலானது துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் இந்த வாரத்தில் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து செல்லலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.