புதிய இந்தியாவுக்கான பார்வை!
மத்திய அரசின் பட்ஜெட், புதிய இந்தியாவுக்கான பார்வையாக உள்ளது. நம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் வகையிலும், 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடனும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நம் நாடு பொருளாதாரத்தில் சூப்பர்பவராக மாற, இந்த பட்ஜெட் ஒரு மைல்கல்லாக அமையும்.
யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,
மக்கள் விரோத பட்ஜெட்!
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதற்கு சிறந்த உதாரணமாக, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் திகழ்கிறது. இது, பணக்காரர்களை வாழ வைப்பதுடன் ஏழைகளை அழிக்கும் வகையில் அமைந்துள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து ஆட்சி செய்து பா.ஜ., அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.
சித்தராமையா, கர்நாடக முன்னாள் முதல்வர், காங்.,
சிறு விவசாயிகளுக்கு உதவும் பட்ஜெட்!
நாடு முழுதும் உள்ள சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. வேளாண் துறைக்காக 1.25 லட்சம் கோடி ரூபாய், இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ‘பி.எம்., கிசான்’ திட்டத்திற்கு மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் வேளாண் துறையை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நரேந்திர சிங் தோமர், மத்திய வேளாண் துறை அமைச்சர், பா.ஜ.,
தீர்வு இல்லாத பட்ஜெட்!
நம் நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் எவ்வித தீர்வும் கூறப்படவில்லை.
பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
மாறாக, பணக்காரர்களுக்கு வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சம்பளதாரர்களுக்கு வரி சலுகை அளித்திருந்தாலும், விலைவாசி உயர்வு அதை நீர்த்துபோக செய்வதாக உள்ளது.
சீதாராம் யெச்சூரி, பொதுச்செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்