போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிறப்புமிக்க சேவை விபூஷண பதக்கங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு இன்று அதனை வழங்கினோம். மேலும், 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த சேவை விருதுகள் வழங்கப்பட்டன.
இன்று பதக்கம் பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்த நிகழ்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் முதலாவது நிகழ்வாகும்.
சர்வஜன வாக்குரிமை
முப்படைகளுக்காக இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
நமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது தேசபிதா டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான தேசிய தலைவர்கள். இன்று நாடு தானாக சுதந்திரம் பெற்றது என்று சிலர் கூறுகின்றனர்.
சுதந்திரம் தானாகக் கிடைக்கவில்லை.
இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் நேச நாடுகளுக்கு ஆதரவாக 02 நாடுகள் இருந்தன. அதில் ஒன்று சீனா. மற்றொன்று இலங்கை. இலங்கையில் மட்டுமே சர்வஜன வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்கத்துறை இருந்தது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மந்திரி சபையின் தலைவராக இருந்த டி.பி. ஜெயதிலக்கவும் பின்னர் தேசபிதா டி.எஸ். சேனநாயக்க ஆகியோருக்கு, இரண்டாம் உலகப் போருக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டி பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) , போருக்குப் பிறகு இலங்கைக்கு ஒரு நிபந்தனையின் பேரில் சுதந்திரம் வழங்கப்படும் என்றார்.
அதன்படி இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்படித்தான் நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்தது.
இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு ஆதரவளிக்க அரச மந்திரி சபை முடிவு எடுத்தது. அதேபோன்று, இலங்கை அதிகாரிகள் தாமாக முன்வந்து இரண்டாம் உலகப் போரை ஆதரித்தனர்.
அமைதி காக்கும் படைக்கு ஆட்சேர்ப்பு
நாங்கள் சுதந்திரம் பெற்ற பிறகு, டி.எஸ். சேனநாயக்க இதனைப் பாராட்டியதுடன், அந்தப் படைகளுடன் எமது முப்படை பிரிவுகளை ஆரம்பித்தார்.
நாம் இரண்டாம் உலகப் போரை ஆதரித்து சுதந்திரம் பெற்றிருந்தால், அதன் கொண்டாட்டத்தின் போது நமது முப்படைகளின் சேவையையும் பாராட்ட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்காக நமது பாதுகாப்புப் படையினர் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள்.
நமது இராணுவம் உலகப் போரின் போதே ஆரம்பிக்கப்பட்டது. அது உலகில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தது. இரண்டாவது யுத்தம் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகவே நடைபெற்றது. அதற்காக நமது இராணுவம் உயிர் தியாகத்துடன் செயற்பட்டது.
ஒரு குடியரசாக நாடு சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடும் இந்த நேரத்தில், நமது பாதுகாப்புப் படைகள் ஆற்றிய இந்த உன்னத சேவையை நாம் நினைவுகூர வேண்டும். அதனால் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முதல் விழாவை முப்படையினருக்காக நடத்த முடிவு செய்தேன்.
நமது முப்படைகள் இப்போது இலங்கையில் மட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையாகவும் செயல்படுகிறது. எதிர்காலத்தில் இந்த அமைதி காக்கும் படைக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.
நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஐம்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இப்போது மீண்டும் ஒரு போர் நடக்கும் போது, 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். அது துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் போர் அல்ல.
பொருளாதார வீழ்ச்சி
இன்று நாம் ஒரு பாரிய பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ளோம்.
இன்று நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பாவிட்டால், இந்த கடன் பொறியில் இருந்து விடுபடாவிட்டால், எமது நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போய்விடும்.
நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. இன்று உலகின் பொருளாதார சக்திகளிடம் நாம் சரணடைய முடியாது.
எனவே இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும்.
அதே போன்று அவர்களின் இழந்த வருமான வழிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். சில அரச ஊழியர்கள் கடன் வாங்கி வரியும் செலுத்தும் நிலையில் வருமானம் இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர்.
இந்த அழுத்தத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டியுள்ளது. இந்த அழுத்தத்தை நம்மால் நீக்க முடியும்.
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா நியூலேண்ட் இன்று என்னைச் சந்தித்தார்.
நாங்கள் முன்னெடுக்கும் இந்த பொருளாதார திட்டத்திற்கு அமெரிக்க அரசு முழு ஆதரவை வழங்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்.
இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இந்தக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எங்களால் நிறைவு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்பாட்டை நாம் பெற்றபோது, அதை உலகமே ஏற்றுக்கொண்டது.
இந்த வருட இறுதிக்குள் இதைவிட சிறந்த பொருளாதார நிலை உருவாகும் என்று நான் நம்புகிறேன். அதனோடு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்க வாய்ப்புக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
அதிலிருந்து நாம் வெளியேற முடியாது. நாம் சரியான பாதையில் செல்வதாக இருந்தால், நாம் மதிநுட்பத்துடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் வெற்றியை அடைய முடியும்.
பொருளாதார போர்
பயங்கரவாதப் போருக்கும் பொருளாதாரப் போருக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. அன்று உயிர்கள் பறிபோயின. இன்று வருமானம் இழந்துள்ளது. அதுதான் வித்தியாசம். இழந்த உயிர்களை மீண்டும் வழங்க முடியாது.
ஆனால் இழந்த வருமானத்தை மீட்டெடுக்க முடியும். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைவரும் அந்த வேலைத்திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம்.
அப்போது நாம் பெற்ற அரசியல் சுதந்திரம் மற்றும் நாங்கள் பாதுகாத்த பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் பொருளாதார சுதந்திரத்துடன் முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி வைஸ் எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட முப்படை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.