விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வேலூர்: விஐடி பல்கலையில், கலைஞர் கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திராவிட மாடல் என்பது அனைத்து துறை வளர்ச்சியாகும் என்று தெரவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 வீரத்தின் விளைநிலமாக விளங்கிக்கொண்டிருக்க கூடிய வேலூரை, கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் நம்முடைய விசுவநாதன். இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் அளவிற்கு விஐடி உள்ளது. இந்த புகழ்பெற்ற விஐடியில் மாணவர்கள் விடுதி அமைத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயர் சூட்டியிருப்பது பெருமை. திமுகவின் செயல்வீரராக அவர் வளர்ந்தார். நாடாளுமன்றத்திற்கு ேபாட்டியிட்டார். கலைஞரை அழைத்துவந்து காகிதப்பூ பிரச்சாரம் கூட்டம் நடத்தினார். 26 வயதில் எம்பியானவர் வேந்தர் விசுவநாதன். இந்தியாவிலேயே இளம்வயது எம்பியாக பொறுப்பேற்றார். அதில் இருந்து அவருக்கு ஏறுமுகம் தான். இப்போது அவர் நம்முடன் இருக்கிறார்.

அது நமக்கு பெருமையாக உள்ளது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரால் மாணவர் விடுதியை திறந்து வைத்துள்ேளன். ரூ.80 கோடியில் 1,301 மாணவர்கள் தங்கி படிக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் பேர்ல் ஆராய்ச்சி பூங்கா ரூ.157 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 69 ஆய்வகங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கல்விக்கு தலைசிறந்த மையமாக அமையப்போகிறது. திராவிட மாடல் என்பது அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய வகையில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

 தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி நடந்து வருகிறது. அது மேலும் வளர்ச்சிபெற தனியார் பங்களிப்பு அவசியம். அதற்கு விஐடி போன்ற கல்விநிறுவனங்கள் துணைநிற்கும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவுக்கு விஐடி வேந்தர்  ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,  ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஐடி துணைத்தலைவர்கள் சங்கர்  விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராம்பாபு  கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன்,  கதிர்ஆனந்த், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏக்கள்  ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலுவிஜயன், புதுவை எம்எல்ஏ  செந்தில், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.