மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை
சாலைகள், நெடுஞ்சாலைகள், மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்க 9.98 லட்சம் கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 33% அதிகமாகும்.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட 66% அதிகமாக, 81,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்களுக்கு 1.96 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. 50 புதிய விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை 0.5% குறைக்க மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய வருவாய் பற்றாக்குறை 6.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக குறைக்கப்படும். 2025-26-ம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் கொரோனா பேரிடர் எதிரொலியாக தடுப்பூசிக்கும், ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கவும் அதிக செலவானதால் அரசின் வருவாய்ப் பற்றாக்குறை அதிகபட்சமாக 9.3 சதவீதமாக இருந்தது.
உணவு மானியத்தில் 30 சதவீதம் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, கொரோனா கால இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உர மானியம் 20 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உரம் வாங்க விவசாயிகள் அதிக பணம் செலவழிக்கும் நிலை உருவாகக் கூடும்.அதேநேரத்தில், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.
மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதிய திட்டம் வகுக்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்
மத்திய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும்.
2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.