வெள்ளரித் தோட்டக் காவலாளி; தெருக்கூத்துக் கலைஞர்; நடிகர் `பரியேறும் பெருமாள்' தங்கராசு மறைவு!

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வந்தவர், தெருக்கூத்து கலைஞர் தங்கராசு. 63 வயது நிரம்பிய அவர், இளம் வயதிலேயே கிராமியக் கலையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் கரகாட்டக் கலைஞராக மாறினார்.

கடந்த 40 வருடங்களாகப் பெண் வேடமிட்டு காலில் சலங்கை கட்டியபடி கரகாட்டம் ஆடி வந்தார். அவரது திறமையான ஆட்டத்தையும் நேர்த்தியான பெண் அலங்காரத்தைப் பார்த்து அவருக்கு நிறைய கிராமங்களில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆட்சியர் விஷ்ணு, இயக்குநர் மாரி செல்வராஜுடன் தங்கராசு

கோயில் விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடிவந்த தங்கராசுக்கு சீசன் இல்லாத நேரங்களில் பிழைப்புக்காக வெள்ளரித் தோட்டத்தில் இரவுநேரக் காவலாளியாகவும் பகல் நேரங்களில் பாளையங்கோட்டை காய்கனி சந்தையில் காய்கள், பழங்கள், வாழை இலை விற்பனை செய்தும் குடும்பத்தை நடத்தி வந்தார்.

அவரது திறமையை அறிந்த இயக்குநர் மாரி செல்வராஜ், நாட்டுப்புறக் கலைஞரான தங்கராசுவுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதிரின் தந்தை வேடத்தைக் கொடுத்தார். அதில் மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னரே அவரது திறமை உலகம் முழுவதும் அறிய வந்தது.

கலைச்சுடர் விருது பெற்ற கலைஞர் தங்கராசு

சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ’கலைச்சுடர்’ விருது வழங்கப்பட்டது. அதைத் தெரிவிப்பதற்காக எழுத்தாளர் நாறும்பூநாதன் அவரது வீட்டுக்குச் சென்றபோது, அந்த மகத்தான நாட்டுப்புற கலைஞரும் அவரது குடும்பத்தினரும் மழை பெய்தால் ஒழுகக்கூடிய கூரை வீட்டில் மின்வசதி கூட இல்லாமல் வாழ்ந்துவருவதைத் தெரிந்து அதிர்ந்துள்ளார்.

தெருக்கூத்து கலைஞர் தங்கராசுவின் வறுமையான வாழ்க்கை குறித்துத் தெரியவந்ததும் விகடன் இணையத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில், திரைப்படக் கலைஞராகவும் நாட்டுப்புறக் கலைஞராகவும் உள்ள தங்கராசு, இடிந்துவிழும் நிலையில் இருக்கும் கூரை வீட்டில் வசித்தது பற்றி பதிவிட்டோம். இது குறித்த தகவல் அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தெருக்கூத்துக் கலைஞர் தங்கராசுவுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

புதிய வீடு திறப்பு விழா

அதன்படி மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தமுஎகச உதவியுடன் தங்கராசுக்கு சொந்தவீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதற்கான சாவியை ஆட்சியர் விஷ்ணு ஒப்படைத்தபோது தங்கராசு நெகிழ்ச்சியடைந்தார். பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜூம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அந்த சமயத்தில் நம்மிடம் பேசிய தெருக்கூத்து கலைஞர் தங்கராசு, “நாற்பது வருடங்களாக நான் மேடைகளிலும், தெருக்களிலும், கோயில் விழாக்களிலும் ஆடிய காலத்தில் எல்லாம் கிடைக்காத அங்கீகாரத்தை பரியேறும் பெருமாள் திரைப்படம் எனக்குக் கொடுத்தது. என்னை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தியவர், இயக்குநர் மாரி செல்வராஜ். எனது நிலையை அறிந்ததும் மாவட்ட நிர்வாகத்தினர் எனக்கு பெரும் உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.

தெருக்கூத்து கலைஞர் தங்கராசு

என் மகளுக்கு தற்காலிக வேலை கொடுத்திருப்பதுடன், எனக்கு நலிந்த கலைஞருக்கான உதவித் தொகையாக 3000 ரூபாய் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுக்கிறது. நான் வெளியே தெரியவந்ததால் இந்த உதவிகளைப் பெறமுடிந்திருக்கிறது. என்னைப் போல ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் வெளியில் தெரியாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கும் உதவிகள் கிடைக்க ஏற்படு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் சக கலைஞர்களும் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று சிந்தித்த மகத்தான கலைஞர் தங்கராசு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு பேச்சிக்கனி என்ற மனவியும் அரசிளங்குமரி என்ற மகளும் உள்ளனர்.

தெருக்கூத்து கலைஞர் தங்கராசு மறைவுக்கு திரைத்துறையினர், மேடைக்கலைஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நம்மிடம் பேசிய தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினரான நாறும்பூநாதன், “ஒரு மகத்தான கலைஞர் தங்கராசு. நாட்டுப்புறக் கலையில் பெரிய வருமானம் கிடைக்காது என்பது தெரிந்தும் தன் வாழ்வின் இறுதி வரையிலும் கரகாட்டம் ஆடியவர்.

வறுமை காரணமாக வெள்ளரித் தோட்டத்தில் காவலாளி வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவரது மகளுக்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிக வேலை கொடுத்ததன் மூலம் அந்தக் குடும்பம் ஓரளவுக்கு நிம்மதியடைந்தது. இருந்தாலும் அவருக்கு நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை. அந்தத் தொகையை அவருக்கு கொடுப்பதாக அறிவித்து ஆணை பிறப்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து இப்போது வரை உள்ள தொகையை அவரது குடும்பத்தினருக்கு அரசு கொடுக்க வேண்டும்.

தங்கராசு குடும்பத்தினர்

சாதாரண காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தங்கராசு சில நாள்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்திருந்தோம். இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் குரைந்துவிட்டதாகவும் உடலில் அசதி மட்டும் இருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வளவு சீக்கிரம் அந்த தெருக்கூத்து கலைஞர் மறைவார் என நினைத்துக் கூடப்பார்க்கவில்லை” என்று வருத்தப்பட்டார். அவரது உடலுக்கு கலைஞர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.