இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகளை விற்பனை செய்து பணம் கொண்டு செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ரசீது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரம் தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. இதே போல மாடுகளை தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகா,தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடப்பதால், மாடுகளை வாங்க வருவோர், அதிக தொகையாக இருந்தால் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதற்கான ஆவணத்தை வைத்துள்ளனர்.

மாட்டை விற்று பணம் வாங்கி செல்வோருக்கு மாட்டு சந்தை சார்பில் ரசீது எதுவும் கொடுக்கப்படாமல் இருந்ததால் பணம் கொண்டு செல்வதில் வியாபாரிகளுக்கு சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இதனால் கடந்த வாரம் வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் இருந்து மாடுகளை விற்றுவிட்டு பணம் கொண்டு செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு மாட்டு சந்தை நிர்வாகம் சார்பில் ரசீது வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகளில் 80 சதவீத மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி  நடைபெறவுள்ளது.  இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 12 லட்சத்து 45 ஆயிரம்  கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு சுமார் 11.30 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையம் அருகே, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 1.74 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது.

காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்ததில், அவர் ஈரோடு வி.வி.சி.ஆர் நகரைச் சேர்ந்த குமரவேல் (39) என்பதும், மார்கெட்டில் வியாபாரம் செய்து வரும் அவர், வியாபாரத்துக்காக வேறு ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நிலையான கண்காணிப்புக் குழுவினர் ரூ.1.74 லட்சத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். அந்தப் பணத்துக்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு குமரவேலிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.