பிபிசி ஆவணப்படம்: சிக்கிய மத்திய அரசு… உச்ச நீதிமன்றம் அதிரடியாக செஞ்ச விஷயம்!

2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்து வெளியிட்ட ஆவணப் படத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு மாநிலங்களில் சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் சேர்ந்து ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். அங்கெல்லாம் காவல்துறையினர் விரைந்து சென்று திரையிடலை தடுத்து நிறுத்துவது, மோதல், தடியடி போன்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.

பிபிசி ஆவணப்படம்

இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து பத்திரிகையாளர் என்.ராம், மகுவா மொய்த்ரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு உரிய பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றம் கெடு

இதற்காக அடுத்த மூன்று வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. குஜராத் கலவரம் தொடர்பான செய்திகள், ஆவணப்படம், விரிவான அலசல், கள ஆய்வு என இந்திய ஊடகங்கள் தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அரசு ஊடகமான பிபிசி ஆவணப்படம் வெளியிடும் போது மட்டும் ஏன் இவ்வளவு சர்ச்சையாகிறது.

ஏன் இவ்வளவு சர்ச்சை

இதற்கு பல காரணங்கள் உண்டு. குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் வெளியான காலகட்டம். சமூக வலைதளங்கள் அதிகரித்துவிட்ட தற்போதைய சூழலில் எந்த ஒரு தகவலையும், யாராலும் தடை செய்யவே முடியாது. வேறொரு வடிவில் வெளிவந்து விடும். அதுமட்டுமின்றி தடை என்றாலே அதை மீறிவது தான் மனித சமூகத்தின் இயல்பான உணர்வாக இருக்கிறது.

தடை செய்தது சரியா?

அதுவும் பிபிசி ஆவணப்படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டிவிட்டது. இதை தடை செய்யாமல் விட்டிருந்தாலே பெரிதாக யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பர். ஏனெனில் பிபிசி பார்ப்பவர்கள் இந்தியாவில் அதிகமானோர் கிடையாது. உள்நாட்டு ஊடகங்களை தான் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.

பிரதமர் மோடி இமேஜ்

இதனால் அப்படி விட்டிருந்தால் ஓரிரு நாட்களில் மக்கள் மனங்களில் இருந்தும், இந்திய ஊடகங்களில் இருந்தும் அப்படியே காணாமல் போயிருக்கும். தற்போது தடை என்ற விஷயத்தை கொண்டு வந்து அதை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தியர்களிடம் தூண்டி விட்டுள்ளனர். இதனால் பிரதமர் மோடி மீதான இமேஜ் பாதிக்கப்படுமா? இல்லையா? என பட்டிமன்றமே நடத்தி விடலாம்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் பிபிசி ஆவணப்படம் சற்றே சறுக்கலை ஏற்படுத்தும் விஷயமாக பாஜக பார்க்கிறது. ஆனால் இந்த ஆவணப்படத்தால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு தான் சிக்கல் வருமே தவிர, பாஜக பிம்பம் உடையாது என்ற பேச்சும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.