ஈரோடு இடைத்தேர்தலில் ஒற்றை அணியாக திமுகவை எதிர்ப்போம்! டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: அண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டிடிவி தினகரன், திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்தால் அதை கண்டிப்பாக ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.   

அதைத் தொடர்ந்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக திருந்தி விட்டது என நம்பி மக்கள் ஆட்சியை கொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் மக்களை ஏமாற்றி தான் வருகின்றனர் என்றும், 60 மாதங்களில் பெற வேண்டிய கெட்ட பேரை தற்போது 20 மாதங்களில் பெற்றுவிட்டனர் என கூறினார்..

தீய சக்தி திமுகவை வீழ்த்த ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய தினகரன், ஒரு அணி என்று சொன்னதற்கான விளக்கமாக, ஒற்றை அணி என்றால் கூட்டணியாக இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், திமுகவை தார்மீகமாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தெரிவித்த டிடிவி தினகரன், எங்களது வேட்பாளர் நல்லவர், இளம் வேட்பாளர் என்றும், மக்களுக்கு அறிமுகம் ஆனவர் என்றும், நாங்கள் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக செயல்படுவோம் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். இருந்தாலும், தீய சக்தி திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் அதை கண்டிப்பாக நாங்கள் ஆதரிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும் நான் பழனிச்சாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்ல என்றும் , திமுகவை வீழ்த்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டால் அவருடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆறாயிரம் ரூபாய் திமுகவினர் கொடுத்தனர்.தற்போது ஈரோடு கிழக்கு தேர்தலில் எட்டாயிரம் ரூபாய் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அது குறித்த அமைச்சர் கே.என் நேரு பேசிய ஆடியோவை செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்ததை பார்த்துள்ளோம் எனக் கூறினார். மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையற்றது. முதல்வர் ஸ்டாலினின் செயல் நீரோ மன்னன் பிடில் வாசிப்பதை போன்று உள்ளது. 

திமுகவிடம் அதிக அளவு பணம் உள்ளது என்பதைக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், எனவே அரசு பணத்தில் நினைவுச் சின்னம் அமைக்காமல் திமுக நிதியில் நினைவு சின்னம் அமைக்கலாம் என்று தெரிவித்தார். மெரினாவில் நீதிமன்றம் கொடுத்துள்ள கலைஞர் நினைவிடத்தில் 100 அடிக்கு கூட நினைவு சின்னம் அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைந்தால் உடைப்பேன் என்று சொல்லுவதை விட அகற்றுவேன் என்று சீமான் கூறியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு பேசியிருப்பார் என்று தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் உள்ள குறைகளை ஏற்கனவே சுட்டிக் காண்பித்து இருக்கிறேன். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை என்று பட்ஜெட் பற்றியும் டிடிவி தினகரன் தனது கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.