இரட்டை இலை சின்னம்; கோர்ட்டில் பஞ்சாயத்து, தேர்தல் அதிகாரி பரபர..!

”இப்போதும் இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் நான் கையொப்பம் இட தயார்: ஒ பி எஸ்

இது நல்ல யோசனையாக தானே இருக்கிறது: நீதிபதிகள் கருத்து

இல்லை அது முடியாது: எடப்பாடி”

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து
எடப்பாடி பழனிசாமி
தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தனி தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும், பாஜக தமது வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவோம் என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஒன்று தமது தரப்பு வேட்பாளரை பாஜக ஆதரிக்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் உங்களது ஆதரவு தருகிறோம், இந்த இரண்டையும் விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்று ஓ. பன்னீர்செல்வம் நினைப்பது தெளிவாக தெரிகிறது.

பழைய நிலைக்கு அதிமுக திரும்பிவிட்டால் எல்லோருக்கும் சாதகம் தான் இல்லையென்றால் இதுதான் நிலைமை என்று ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எதற்கும் அசைவதாக தெரியவில்லை.

பாஜகவின் ஆதரவு இல்லையென்றாலும் பரவாயில்லை; உங்களையெல்லாம் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துவிடக்கூடாது என்று ஓபிஎஸ்-ஐ பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இருப்பினும், இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னத்தால் ஈபிஎஸ்-க்கு இன்னொரு தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு செய்யப்படும் என ஈரோடு மாநகராட்சி கமிஷனரும் தேர்தல் நடத்தும் அலுவலருவமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் இடையிட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுவின் மீது பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அ.தி.மு.க.வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில், 2022 ஜுலை 11-ந் தேதி அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்று வரும் நிலையில் விசாரணையின்போது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை தெரிவித்தது. ஓபிஎஸ் தரப்பில், இப்போதும் இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் நான் கையொப்பம் இட தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி தரப்பில் அதை ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவக்குமாரிடம் கேட்டபோது, இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் அதற்கு தகுந்தார்போல் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.