திருவிழாவில் காணாமல்போன மாணவி-9 மாதங்களுக்குபின் மலைப்பகுதியில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல்போன பள்ளி மாணவியின் உடல், வனப்பகுதியில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புக் கூடு மற்றும் தடயங்களை சேகரித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
image
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலையும் சேகரிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய மகள் உயிரோடு தான், யாருடைய பாதுகாப்பிலோ இருக்கிறாள் என பெற்றோர்கள் எண்ணியிருந்துள்ளனர்.
image
இந்நிலையில் எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் எலும்புக்கூட்டில் ஒருசில பகுதிகள் மட்டுமே இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பெருமாள் தனது மகளாக இருக்குமோ என எண்ணி, உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது எலும்புக்கூட்டில் இருந்து செயினை வைத்து தனது மகள்தான் என்று உறுதி செய்துள்ளார்.
image
இதனையடுத்து கோட்டப்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்குவந்த காவல்துறையினர் சோதனைசெய்து, மருத்துவக்குழுவினரை வரவழைத்து, அங்கு இருந்த பெண்ணின் எலும்புக்கூடு, அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவற்றை சேகரித்து டி.என்.ஏ டெஸ்ட் மற்றும் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்த பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை, யாரோ கொலை செய்திருக்கலாம் என்றும், மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
image
இதனால் பெண்ணின் மரணம் தற்கொலையா? கொலையா? என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த, 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், எலும்புக்கூடு மட்டுமே கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.