சென்னையில் சிலிண்டர்களுக்கு பதிலாக குழாய் வழியாக கேஸ் இணைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கம்

சென்னை: சிலிண்டர்களுக்கு பதிலாக குழாய் வழியாக கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் செயல்படுத்தும்போது பூமிக்கு அடியில் குழாய்கள் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வீடுகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு, காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக குழாய் வாயிலாக இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்க, தமிழக அரசு 2020-ல் அனுமதி வழங்கியது.

சென்னை மாநகராட்சியில், ‘டோரன்ட் காஸ்’ நிறுவனம், குழாய் வாயிலாக வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின், இதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இணைந்து உருவாக்கி உள்ளது.

இதில், காஸ் குழாய் புதைவடம், மற்ற சேவை நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும். மேலும், கல்வெட்டுகள், பாலங்கள் போன்றவை பாதிக்கப்படக் கூடாது. அதேபோல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிக்காட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன.

சாலைக்கான கட்டண விபரம் (மாநகராட்சி சாலைகள் – ஒரு கி.மீ., நீளத்திற்கான வைப்புத் தொகை):

  • தார் சாலை – ரூ.20 லட்சம்
  • கான்கிரீட் சாலை – ரூ. 21.75 லட்சம்
  • பேவர் பிளாக் சாலை – ரூ.17 லட்சம்
  • மண் சாலை – ரூ.3.10 லட்சம்
  • நீர்நிலை செல்லும் சாலை – ரூ.4.40 லட்சம்

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் தார்ச் சாலையில் புதைவடத்தில் கேஸ் குழாய் இணைப்பு அமைக்க, ஒரு கி.மீ., நீளத்திற்கு 20 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதேபோல், கான்கரீட் சாலைக்கு ஒரு கி.மீ., நீளத்திற்கு, 21.75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். நெடுஞ்சாலை துறை சாலையின் கட்டணமும் மாறுபடும்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், சாலை வெட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்து, அதன்பின் அச்சாலையில் காஸ் குழாய் புதைவட பணிக்கு அனுமதி அளிப்பர். அதற்கான அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொண்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சாலையை சரி செய்வதற்கான தொகையில் ஐந்து மடங்கு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.

சென்னையில் குழாய் வாயிலாக வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்குவதற்கு, சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி, அதற்கான பரிந்துரை மற்றம் வழிக்காட்டுதல் குறித்து, குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை தமிழக பரிசிலித்து விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.