மதுரை: மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு கிராமம். இங்கு 1996-ல் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் 1997-ல் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் மேலவளவைச் சேர்ந்த ராமர் உட்பட 17 பேருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் 17 பேரில் 3 பேர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி சிறையிலிருந்து முன் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகியோர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 2019-ல் முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் முன்விடுதலையை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் பெ.ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான குற்றத்தின் தன்மையை கருத்தில் கொள்ளாமல் 13 பேரையும் அரசு விடுவித்துள்ளது. 13 பேரும் விடுதலையால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதனால் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இவர்களின் முன்விடுதலையை எதிர்த்து முருகேசன் உட்பட கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு 13 பேரும் மேலவளவு கிராமத்துக்கு செல்லக்கூடாது, வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. பின்னர் இந்த நிபந்தனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: ”ராமர் உட்பட 13 பேர் பரோலில் விடுதலை செய்யப்பட்ட போது எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. முன்விடுதலை செய்யப்பட்ட பிறகும் மேலவளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. மேலும் 13 பேரும் முன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அரசு அனைத்து தரப்பு மற்றும் சூழலை பரிசீலனை செய்துள்ளது. அதன் பிறகு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாணையில் தலையிட விரும்ப வில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.