224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன.
ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது.
இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்முறை கூட்டணி கணக்குகள் மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
மேலும் மதம் சார்ந்த அமைப்புகள், மடங்கள் உள்ளிட்டவற்றிற்கு நன்கொடை வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. சரக்கு வாகனங்களை ஆய்வு செய்ய மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைப்பது, பணப் பரிவர்த்தனைகளை ஆராய்வது என ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தான் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் இம்முறை முன்கூட்டியே அதிரி புதிரி சம்பவங்களை பார்க்க முடிகிறது. கடந்த செவ்வாய் அன்று அனைத்து மாவட்ட துணை ஆணையர்களுக்கும் உத்தரவு ஒன்று பறந்தது. அதன்படி, சோதனை சாவடிகளில் 24/7 செயல்படும் வகையில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வரை 50 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார், சுங்க வரித்துறை, வர்த்தக வரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றின் ஊழியர்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் சரக்கு வாகனங்கள், ஆள் நடமாட்டம், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கவனித்தால் உரிய ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல நடிகர் கிச்சா சுதீப், காங்கிரஸ் மூத்த தலைவரை சந்தித்து இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் வீட்டுக்குச் சென்று சந்தித்தார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தப் போகிறார்களா? ரவிக்குமார் எம்.பி., கேள்வி!
கிச்சா சுதீப்பின் அரசியல் அறிமுகம் குறித்து அவர்கள் விவாதித்தாரா என்பதை நடிகரோ அல்லது கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டி.கே.சிவகுமாரோ உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் இருவரும் சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாகராக கிச்சா சுதீப்பை ஆக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.