புதுடெல்லி: நிர்பயா நிதியத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என திமுக எம்பியான கனிமொழி இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, மொத்தம் 38 திட்டங்களுக்காக ரூ.9228.50 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்தார்.
இது குறித்து இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி சில கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார். இதற்கு தனது எழுத்துபூர்வமான பதில்களை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
தனது கேள்விகளில் தூத்துக்குடி எம்பியான கனிமொழி, “நிர்பயா நிதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன? நிர்பயா நிதியத்தின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் விவரங்கள் என்ன? கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி பற்றிய விவரங்கள் என்ன? நிர்பயா நிதிப் பயன்பாட்டில் ஏதேனும் தணிக்கை அல்லது கண்காணிப்பு இதுவரை செய்யப்பட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என்ற கேள்விகளை கேட்டிருந்தார்.
இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்துள்ள பதிலில் கூறியதாவது: தற்போது வரை , நிர்பயா நிதியத்தின் கீழ் மொத்தம் 38 திட்டங்களுக்காக ரூ. 9228.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, தற்போது உயர்மட்ட நிதி குழுவின் பரிசீலனையில் உள்ளது இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சில தடுமாற்றங்கள் நடைமுறை ரீதியில் இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட 38 திட்டங்களில் சில நேரடியாக மத்திய அரசு அமைச்சகங்களாலும், அதன் துறைகளாலும் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களில் பெரும்பாலானவை மாநில, யூனியன் பிரதேச அரசு நிர்வாகங்களால்தான் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டு அரசின் நிர்வாகத் துறைகளில் இருந்து 15 திட்டங்களுக்காக நிதிகள் கோரப்பட்டன.
இவை, எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சப்போர்ட் சிஸ்டம், ஒன் ஸ்டாப் சென்டர், பெண்கள் ஹெல்ப் லைன், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிதி, பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தடுப்பு, கடத்தல் தடுப்பு மையங்களை அமைத்தல், வலுப்படுத்துதல், காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையங்கள் அமைத்தல், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், வாகன கண்காணிப்பு தளத்தை அமைத்தல், பயன்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல், பாதுகாப்பான நகரத் திட்டம், டிஎன்ஏ பகுப்பாய்வை வலுப்படுத்துதல், சைபர் தடயவியல் மற்றும் தொடர்புடைய வசதிகள், தடயவியல் ஆய்வகங்கள் சார்ந்தவை.
தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள், செயல்படுத்தும் துறைகளில் இருந்து வந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு நிர்பயா நிதியத்தில் இருந்து 2017-18 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை 314.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்பயா நிதியத்தை பயன்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட அதிகார கமிட்டிதான் இந்த நிதியத்தில் இருந்து நிதி ஒதுக்குவதற்கான திட்டங்களை மதிப்பீடு செய்து பரிந்துரைக்கிறது. மேலும் நிதி ஒதுக்கப்பட்ட பிறகு அவ்வப்போது திட்டங்களின் செயல்பாட்டு நிலையை குறிப்பிட்ட நேரத்துக்குள் அவ்வப்போது ஆய்வு செய்கிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், செயல்படுத்தும் நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நிர்பயா நிதியத்துக்கு உட்பட்ட திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து இந்த கமிட்டி கண்காணிக்கிறது. இதன் மூலம் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்ட ஆவண செய்யப்படுகின்றன” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.