ஆரம்ப காலங்களில், ஒரு சாதாரண தொழிலதிபராக வலம் வந்த கெளதம் அதானி, கொரோனா காலக்கட்டங்களில்தான் அசுர வளர்ச்சியைப் பெற்றார். உலகமே ஊரடங்கிற்குள் மூழ்கி பொருளாதாரச் சரிவுகளைச் சந்தித்தபோது, அதானி மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்தார். இந்த காலகட்டங்களில் அவருடைய வளர்ச்சி எப்படி சாத்தியமானது எனப் பார்ப்போம்.
ஆரம்பகால தொழில் நிறுவனம்
2013ஆம் ஆண்டில் 3.1 பில்லியனாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2020ஆம் ஆண்டில் 8.9 பில்லியனாகவும், 2021ல் 50.50 பில்லியனாகவும், 2022ல் 146.0 பில்லியனாகவும் உயர்ந்தது. அதாவது, இந்த ஆண்டுகளில் சுமார் 40 மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறார். 1988ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, ஏற்றுமதி, இறக்குமதி பணிகளைக் கவனித்துவந்த, அதானி,1994ஆம் ஆண்டு குஜராத் அரசு முந்த்ரா துறைமுகத்தில் அனுமதி வழங்கிய துறைமுக வசதிகளால் தமது நிறுவனத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தார். அப்போதே எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலையை நிறுவிய அவர், அதற்கான நிதியை பங்குச்சந்தை மூலம் திரட்டினார். அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2014ல் அவருடைய நிறுவனங்கள் மேலும் விரிவடைந்தன.
நிலக்கரி சுரங்கரத்துக்கு கடன்
இந்த நிலையில்தான் 2019ல் ஆஸ்திரேலியாவின் க்ரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கெளதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு இந்திய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது. அதன் நீட்சியாகத்தான், 2019ஆம் ஆண்டில் விமான நிலைய நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிக்குள் வந்த அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, அடுத்த இரு ஆண்டுகளில் மும்பை உட்பட நாட்டின் 7 (மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு) முக்கிய விமானநிலையங்களின் நிர்வாக, பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் வழங்கப்பட்டன.
கொரோனா காலத்தில் அசுர வளர்ச்சி
இதேபோல அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு பல மரபுசாரா மின்சாரத் திட்ட ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 2021-22 நிதியாண்டில், அதானி போர்ட்ஸ் மட்டும் சுமார் 312 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டது. இதுபோக, இந்தியாவின் முக்கியமான 15 துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்தது அதானி குழுமம். இதுதவிர மின் விநியோகம், மின் உற்பத்தி, கட்டுமானம், காஸ் உற்பத்தி, பெட்ரோலியம் எனப் பல நிறுவனங்களிலும் அதானி குழுமத்தின் முதலீடு இந்த கொரோனா காலத்தில் அசுர வளர்ச்சி கண்டது.
குறிப்பாக, 2021ம் ஆண்டிலிருந்து அதானிக்கு வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. அதாவது நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி லாபம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதானி குழுமம் 35 புதிய நிறுவனங்களையும் வாங்கியுள்ளது. இதில், ரூ.82,600 கோடியை லாபமாகப் பெற்றுள்ளது.
2 ஆண்டுகளில் உயர்ந்த பங்கு மதிப்பு
கடந்த இரு ஆண்டுகளில் அதானி குழுமத்தில் சில நிறுவனங்கள் 1000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. 2020ம் ஆண்டிலிருந்து அதானி டோட்ல் கேஸ், அதானி கிரீ்ன் பங்குகள் 1000 சதவீதம் உயர்ந்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் நிறுனப் பங்கு மதிப்பு 2020ம் ஆண்டிலிருந்து 1400 மடங்கும், அதானி டிரான்மிஷன் 1000 சதவீதமும் வளர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு மதிப்பு 120 மடங்கு உயர்ந்துள்ளது. அதுபோல், 2022ஆம் ஆண்டில் சிமெண்ட் நிறுவனம் ஒன்றை வாங்கியதன் மூலம் லாபம் அடைந்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக அதானி உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டில் அதிக லாபம்
இந்த அதிரடியான கையகப்படுத்தல்களால் இக்குழுமத்தின் வருமானமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.70,463 கோடியிலிருந்து ரூ.2.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 53.8% ஆகும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி பட்டியலிடப்பட்ட இவரது ஏழு நிறுவனங்களில் இவருக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடியாக இருந்தது. குறிப்பாக, இந்தக் குழுமம் 2022ம் நிதியாண்டில் ரூ.18,066 கோடி லாபம் சம்பாதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2023 முதல் பொருளாதாரச் சரிவு
இந்த நிலையில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், கடந்த சில நாட்களாக அதானி குழுமம் கடுமையான சரிவுகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு மொத்தம் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது, மொத்த பங்கு மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு சரிந்துள்ளது. மேலும், அதானியின் சொத்து மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை விட பின்தங்கி, 15 வது இடத்துக்கு அதானி தள்ளப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி போர்ப்ஸ் பட்டியலின்படி இவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.6.15 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவு வருவாய் ஈட்டியவராக பேசப்பட்ட அதானி, தற்போது பொருளாதார சரிவுகளால் விமரசனத்துக்குள்ளாகி இருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM