சேலம்: இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்தி வருவதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டும், திருக்கோயில்களுக்கு வரவேண்டிய வருவாய் இனங்களை வசூலித்தும் வருகிறது. அந்த வகையில் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைக்காக நிலுவைதாரரின் அசையும் சொத்தான நகர்புற வழித்தட பேருந்து இன்று (03.02.2023) ஜப்தி செய்து திருக்கோயில் வசம் ஒப்படைப்பட்டது.
சேலம் மாவட்டம், சேலம் நகர், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு அழகரசன் என்பவரிடமிருந்து ரூ.1,09,42,824 நிலுவைத் தொகை வரவேண்டியிருந்தது. இந்த தொகையினை செலுத்திட பலமுறை உரிய அறிவிப்புகள் அனுப்பியும் நிலுவைதாரர் தொகை செலுத்த தவறியதால் சட்டப்பிரிவு 79C-ன் கீழ். சேலம் இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, நிலுவைதாரரின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்து விதிகளின்படி ஏல நடவடிக்கைகள் மூலம் விற்பனை செய்து வரவேண்டிய பாக்கித் தொகைக்கு ஈடுசெய்து கொள்ளும் நடவடிக்கைகளுக்காக சேலம் உதவி ஆணையர் அவர்கள் ஜப்தி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (03.02.2023) சேலம், உதவி ஆணையர் உரிய அறிவிப்புகள் அனுப்பியும் நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் நிலுவைதாரரின் அசையும் சொத்தான நகர்ப்புற வழித்தடப் பேருந்தினை ஜப்தி செய்யப்பட்டு, திருக்கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.