தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் 1.33 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது வேளாண் துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பிப்.1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மிதக்கின்றன.
இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து நேற்று முன்தினம் கணக்கெடுப்புப் பணிகளை வேளாண் துறையினர் தொடங்கினர். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் 41,000 ஏக்கர், உளுந்து 1,600 ஏக்கர், நிலக்கடலை 1,200 ஏக்கர் மழைநீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 18 ஆயிரம் ஏக்கர் உளுந்து, 2,170 ஏக்கர் கடலை பயிர்களும், நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது வேளாண் துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை. சில இடங்களில் மழையில்லாத நேரங்களில் நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கை: எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஈரப்பத அளவை 22 சதவீதம் வரை உயர்த்தி, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.