டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தஞ்சாவூரில் ஆய்வுசெய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாள்கள் மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயலில் தேங்கிய மழை நீரை வடியவைத்து பயிரை காப்பதற்கான பணிகளை விவசாயிகள் செய்தும் பலன் இல்லை. இதே போல் அறுவடை செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, “பாடுபட்டு விளைவித்த பயிரை அறுவடை செய்வதற்குள் பெய்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதிலிருந்து விவசாயிகள் காக்கப்பட வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும், நெல் கொள்முதலில் நெல் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்” என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கராபணி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்வார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை புத்துார், ஆம்பலாப்பட்டு, பட்டுக்கோட்டை அருகே புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வயலில் சாய்ந்த நெற்பயிர்களை பார்வையிட்டதுடன், விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் அழுகிய நெற் பயிரைக் காட்டி, “உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே, பருவம் தப்பிய மழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நாங்கள் மீள முடியும்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தபோது, “நெல் ஈரபதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்” என விவசாயிகள் கூற, உடனே அமைச்சர் சக்கரபாணி, “தமிழக அரசின் கையிலிருந்தால் உடனே முதலமைச்சர் செய்திருப்பார். ஒன்றிய அரசே செய்ய வேண்டும் என்பதால் உடனே முதலமைச்சர், பிரதமர் மோடியின் கவனத்துக்கு இதனை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களில், சுமார் 2.15 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். கூடுதலாக பாதிப்புகள் இருக்கலாம். விவசாயிகளின் பாதிப்புகளை உணர்ந்திருக்கிறோம். அதன் ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் வழங்குவோம்.
இதையடுத்து முதலமைச்சர் இழப்பீடு தொகையை அறிவிப்பார்கள், அத்துடன் பயிர் காப்பீடு தொகை முழுமையாக கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். மழைக்கு முன்பாக, நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல்லை ஆய்வு செய்தபோது, 15 சதவிகித அளவுக்கு ஈரப்பதம் இருந்தது. மழைக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நெல்லை ஆய்வு செய்ததில் 21 சதவிகிதமாக இருக்கிறது. இந்த நிலையில், 22 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் பேசி, ஈரப்பதம் குறித்த தளர்வுகளை பெற்று தருவார்” என்றார்.